சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கும் பொருட்டு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி பூஞ்சேரி சந்திப்பு வரை 133 கி.மீ. நீளத்தில் சென்னை எல்லைச் சாலை அமையவுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைக்கான விவாதத்தில் நெடுஞ்சாலைத் துறை குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் சென்னை சாலைகள் குறித்த அவரது அறிவிப்பு:
“நவீன இயந்திரங்களால் சாலை பராமரிப்பு
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சாலைகளை மிகச் சிறப்பாகப் பராமரிக்க, சாலை ஓரங்களில் குவியும் மண், குப்பை, மழை நீர் தேங்குதல் போன்றவை நவீன இயந்திரங்களைக் கொண்டு துரிதமாக அகற்றப்படுகிறது.
சென்னை மாநகரில் 6 துப்புரவு இயந்திரங்களும் (Road Sweeper), மண் குவியல்களை விரைவாக அகற்ற ஏதுவாக ஒரு சிறிய வடிவிலான மண் அகற்றும் இயந்திரம், மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் அடைப்புகளை எடுப்பதற்கு திறன் வாய்ந்த உறிஞ்சும் இயந்திரமும் (Super Sucker cum Jet Rodding Machine) பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர சாலைகளில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய 10 சிறப்பு இயந்திரங்கள் ரூபாய் 536.80 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு சிறந்த முறையில் சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
சென்னை பெருநகர மேம்பாடு
சென்னை பெருநகரத்தில் போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைக்கும் வகையில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம், பல்லாவரம் மேம்பாலம், திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலை உயர்மட்டப் பாலம், கொளத்தூர் ரெட்டேரி மேம்பாலம் (வலதுபுறம்), கொரட்டூர் வாகன சுரங்கப்பாதை, தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம், கீழ்கட்டளை மேம்பாலம், மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் வேளச்சேரி ஆகிய ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படவுள்ளன.
புதிய வளர்ச்சி வங்கியின் (NDB) நிதி உதவியுடன் சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டத்தில், (CCTDP) மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ள 18 பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த ரூபாய் 1,121 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் (CKICP)
ரூபாய் 6448 கோடி மதிப்பில் 590 கி.மீ. நீளத்திற்கு 15 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு செய்யப்படவுள்ளன. இதில் ரூபாய் 4,384 கோடி மதிப்பில் கட்டுமானப்பணி மற்றும் ரூபாய் 1,574 கோடி மதிப்பில் 463 ஹெக்டேர் நில எடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை எல்லை சாலை திட்டம் (CPRR)
சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கும் பொருட்டு எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி பூஞ்சேரி சந்திப்பு வரை 133 கி.மீ. நீளத்தில் சென்னை எல்லைச் சாலை அமையவுள்ளது. இதில் 97 கி.மீ. புதிய சாலையாகவும், 36 கி.மீ. தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் 5 பிரிவுகளாகச் செயலாக்கப்படவுள்ளன.
பிரிவு-1, 2, 3 மற்றும் 5-க்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. பிரிவு-1க்கான கட்டுமானப் பணி ஜப்பான் பன்னாட்டு நிறுவன நிதி உதவியுடன் ரூபாய் 2,473.70 கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரிவு-2 மற்றும் 3-ன் கட்டுமானப் பணி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.