உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் கட்ட மாட்டோம் என மத்திய நீர்வளத் துறைக்கு கர்நாடகம் வாக்குறுதி அளித்துள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மன்னார்குடியில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 6-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்து முறையிட்டோம்.
அதனடிப்படையில், மத்திய நீர்வளத் துறை செயலகத்திடம் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) எங்களுக்கு வந்த கடிதத் தில், காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி கேட்டு கர்நாடகம் அளித்த கோரிக்கையை, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் அனுமதி வழங்க இயலாது என்று கூறி கடந்த 2014-ம் ஆண்டே திருப்பி அனுப்பிவிட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதுபோல, ராசிமணல், மேகேதாட்டுவில் அணைகள் கட்ட அனுமதி கேட்டு கர்நாடகத்திடமிருந்து இதுவரையிலும் கடிதம் எதுவும் வரவில்லை என்றும், கடிதம் குறித்து கர்நாடகத்திடம் விளக்கம் கேட்டபோது, “இது இரு மாநிலப் பிரச்சினை என்பதால், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, பிரிவு 13-ன்படி செயல்படுவோம் என்றும், 2008 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதால், அதன் அனுமதி பெறாமல் அணை கட்ட மாட்டோம்” என்றும் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி, 2013 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழு அமைப்பது குறித்து இரு மாநிலங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு இடைக்காலமாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில், இரு மாநில தலைமைச் செயலாளர்களைக் கொண்ட காண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, அக்குழு உரிய முறையில் காண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க இரு மாநில உறவுகளைச் சீர்குலைக்கும் நோக்கில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, கர்நாடகம் அணை கட்டுமானப் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், மத்திய அரசு அனுமதி தரத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது பிரதமர் மோடி, சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்வதோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கை களை தொடரும் நோக்கில் உச்சநீதி மன்றத்தில் இருக்கின்ற வழக்கை தமிழக அரசோடு இணைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.