கே.எஸ்.அழகிரி - ரஞ்சன் கோகய்: கோப்புப்படம் 
தமிழகம்

மாநிலங்களவை உறுப்பினராக ரஞ்சன் கோகய் நியமனம்; நீதிமன்றங்களின் மாண்பு பறிபோய்விடுமோ என அச்சம்: கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

நீதிபதிகளுக்கு மத்திய பாஜக அரசு நியமனங்களின் மூலம் சலுகை வழங்க முற்பட்டால் நீதிமன்றங்களின் மாண்பு பறிபோய்விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 18) வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் நீதிமன்றத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை பாஜக அரசு தொடுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து மன்னிக்க முடியாத குற்றத்தை பாஜக அரசு செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு வகிப்பவர்கள் ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகள் வரை எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது நீண்டகால மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபு ரஞ்சன் கோகய் நியமனத்தின் மூலம் மீறப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மறைந்த அருண் ஜெட்லி இதே கருத்தை ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறார். அவரது கூற்றின்படி அந்த இடைவெளி மீறப்பட்டால் நீதிபதியின் நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசு தலையிடுகிற நிலை ஏற்படும் என்று மிகத் தெளிவாக கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பாஜக முக்கியத்துவம் அளித்திருந்தால் இன்றைக்கு இத்தகைய நியமனம் நடைபெற்றிருக்காது. இந்த நியமனத்தின் மூலம் நீதிமன்ற அமைப்பின் மீது கரும்புள்ளி விழுந்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த ரஞ்சன் கோகய் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த தீர்ப்புகள் நரேந்திர மோடி ஆட்சிக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது.

நாடு முழுவதும் மக்களாலும், அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்ட ரபேல் ஊழல் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகய்தான் தள்ளுபடி செய்தார்.

எந்த பாபர் மசூதியை யார் இடித்தார்களோ, அவர்களிடமே அந்த சர்ச்சைக்குரிய இடத்தை வழங்கி, ராமர் கோயில் கட்டுவதற்கு 2.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியவரும் ரஞ்சன் கோகய்தான். இந்தத் தீர்ப்பை இந்தியாவில் வாழ்கிற 20 கோடி முஸ்லிம்களும் கட்டுப்பாடுடன் ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் மனதில் ஆறாத வடு ஏற்பட்டுவிட்டதை எவரும் மறுக்க முடியாது.

அதேபோல, அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கண்காணித்தவரும் இவரே. இதன் மூலம் அசாமில் வாழ்ந்துகொண்டிருந்த 12 லட்சம் இந்துக்களும், 7 லட்சம் முஸ்லிம்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370 வழங்கிய சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தவரும் இவரே. இத்தகைய தீர்ப்புகளின் மூலம் பாஜகவுக்கு நீதித்துறையின் மூலம் ஏற்பட இருந்த பல்வேறு ஆபத்துக்கள் காப்பாற்றப்பட்டதை எவரும் மறந்திட இயலாது.

ரஞ்சன் கோகய் நியமனம் குறித்து எழுகிற குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாத பாஜகவினர், முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் பரிந்துரை செய்தது என்கிற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதியாக 1991 இல் ஓய்வு பெற்ற ரங்கநாத் மிஸ்ரா, 6 ஆண்டுகள் கழித்து 1998 இல் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரஞ்சன் கோகயைப் போல, குடியரசுத் தலைவரின் நியமனத்தின் மூலமாக ரங்கநாத் மிஸ்ரா மாநிலங்களவை உறுப்பினராக ஆகவில்லை. எனவே, மக்களைத் திசை திருப்புகிற பாஜகவின் குற்றச்சாட்டில் எந்த நியாயமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அதுபோல, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதாசிவம் ஓய்வு பெற்ற மூன்று மாதங்களில் கேரள மாநில ஆளுநராக பாஜக அரசு நியமித்தது. குஜராத் மாநிலத்தில் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் ஷாவை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியதற்காகத் தான் ஆளுநர் பதவி சதாசிவத்திற்கு வழங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு அப்போது எழுந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதைப்போல நீதிபதிகளுக்கு மத்திய பாஜக அரசு நியமனங்களின் மூலம் சலுகை வழங்க முற்பட்டால் நீதிமன்றங்களின் மாண்பு பறிபோய்விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக பாஜக அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் தவே கடுமையான விமர்சனத்தை செய்திருக்கிறார். 'இந்த நியமனம் கடுமையான ஆட்சேபனைக்கு உரியது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் இருந்தபோது செய்ததற்கெல்லாம் பலனாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது' என்று மிக வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். இதைவிட வேறு கடுமையான விமர்சனத்தை வேறு எவரும் செய்ய முடியாது.

எனவே, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பைப் பெற்றிருக்கிற நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து ரஞ்சன் கோகய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் நீதிமன்றத்தின் மாண்பு, சுதந்திரம் ஆகியவற்றிற்கு துடைக்க முடியாத களங்கத்தை செய்த குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாக நேரிடும் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT