தமிழகம்

கரோனா முன்னெச்சரிக்கை: 33 நாட்களாகத் தொடர்ந்த வண்ணாரப்பேட்டை இஸ்லாமியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரது வேண்டுகோளையும் ஏற்று 33 நாட்களாகத் தொடர்ந்த ஷாகின் பாக் வழி இருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீஸார் மற்றும் போராட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தமிழக அளவில் பெரும் போராட்டமாக வெடித்தது. அதுவரை ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என நடத்திய போராட்டம் டெல்லி ஷாகின் பாக் போராட்டம்போல் இருப்புப் போராட்டமாக மாறியது.

சென்னை வண்ணாரப்பேட்டை இதற்கான அச்சாரமாக அமைந்தது. இந்நிலையில் போராட்டம் தொடர்ச்சியாக கடந்த 33 நாட்களாக நடந்து வந்தது. போராட்டம் நடத்தியவர்கள் அவர்களுக்குள்ளேயே உணவு சமைத்துப் பரிமாறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தின் இடையே ஒரு திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உலகை அச்சுறுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத்தொடங்கியது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட ஷாகி ன்பாக் வழி இருப்புப் போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்றிரவு 12 மணிக்கு வண்ணாரப்பேட்டை இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு:

'' சென்னையில் ஷாகின் பாக் போராட்டம் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரம்பித்து இன்று வரை (33 நாட்களாக) பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு அவற்றை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு நம்முடைய போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஆயினும் உலகெங்கிலும் தற்சமயம் பரவி வரும் கரானா நோய் தொற்று தற்பொழுது இந்தியாவையும் வெகுவாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.

இந்த அசாதரண சூழலையும் நாட்டின் நன்மையையும் கருத்தில் கொண்டு நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிரான தொடர் போராட்டத்தினை தற்காலிகமாக தள்ளி வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக முடிவுதான். எதிர்வரும் காலத்தில் மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை வீரியமாக போராட்டத்தினை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை போராட்டக் களத்தில் வீரியமுடன் முன்னின்ற பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் போராட்டக் குழு நன்றியினை தெரிவித்து கொள்கிறது”.

இவ்வாறு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT