“லியோ முத்து தனது பலவீனத்தை பலமாக மாற்றும் திறன் கொண்டவர்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்தார்.
சாய்ராம் கல்விக் குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான லியோ முத்து என்கிற மா.ஜோதிப்பிரகாசம் கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி காலமானார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத்திறப்பு விழா சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்விக் குழும வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கிங்ஸ் பொறியியல் கல்லூரி தலைவர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ வரவேற்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, லியோ முத்துவின் படத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “லியோ முத்து தனது பலவீனத்தை பலமாக மாற்றும் திறன் கொண்டவர். அவர் தனது வாழ்நாளில் அசையும் சொத்துகளாக பல்லாயிரக் கணக்கான மாணவர்களையும், அசையா சொத்துகளாக கல்விக் குழுமத்தையும் உருவாக்கி என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்” என்றார்.
சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, தனது தந்தை லியோ முத்துவின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும் “கல்வியே உலகை வெல்லும் கருவி என்பதை உணர்ந்து கல்விப் பணியை திறம்பட செய்தும், சமூக பொறுப்பை உணர்ந்தும், இல்லாதவர்களுக்கு உதவி செய்தும், தன் வாழ்நாளில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர். டாக்டர் அப்துல் கலாமும், லியோ முத்துவும் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளனர். இங்கு கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயர் வைக்கப்பட உள்ளது. இதுதான் அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை” என்றார்.
சாய்ராம் கல்விக் குழுமத்தின் அறங்காவலர் சர்மிளா ராஜா, தன்னுடைய தந்தையின் நினை வலைகளை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் லியோ முத்து நினைவலை தொகுப்பு மலரை டாக்டர் பிஷ்வாகுமார் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். டி.ஆர்.பாலு பேசுகையில், “லியோ முத்து தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு சமூக மேம்பாட்டுக்காக வாழ்ந்தவர்” என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பழனிச்சாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கலாநிதி, விஸ்வநாதன், ஆர்.எம்.கே.கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ், டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், சன் டிவி தொகுப்பாளர் வீரபாண்டியன் மற்றும் சாய்ராம் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.