கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்திய பரபரப்பால் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி, சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பல இடங்களிலும் சோதனைகள் நடைபெறுகின்றன. நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இது தொற்று நோய் என்பதால் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டுமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை வருகிற 31-ம் தேதி வரைமூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கோவிட்-19 வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்தபோது, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால், ஒருவேளை உணவுக்கு கூட பலர் கடும் சிரமங்களை சந்திக்க நேர்ந்தது.
அலைமோதும் கூட்டம்
இதேப்போன்ற ஒருநிலை தமிழகத்தில் ஏற்படுமோ என்ற அச்சம் ஒருசிலரிடம் ஏற்பட்டது. அவர்கள் 2 முதல் 3 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்க நேற்றே தொடங்கி விட்டனர். இதனால் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகை கடைகளில் கூட்டம் அதிகரித்துவிட்டது.
இதுகுறித்து கடைக்காரர்களிடம் கேட்டபோது, “அரிசி, கோதுமை, ரவை, துவரம் பருப்பு, உளுந்து, கொண்டை கடலை, பட்டானி, மசாலா பொருட்கள் என மாதக்கணக்கில் கெட்டுப்போகாத பொருட்களையே அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த பொருட்களுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சீனாவைப்போல கடையை மூடும் நிலை ஏற்படுமோ என்ற பயமும் இருக்கிறது” என்றனர்.
கூடுதலாக பொருட்களை வாங்கிய நபர்கள் கூறும்போது, “அரிசி, பருப்பு, உப்பு இந்தமூன்றும் இருந்தால் பெரியவர்களுக்கு போதுமானது. ஆனால், குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு தேவையான டயாப்பர், மாவு பொருட்கள், பால் பவுடர் போன்றவற்றை கூடுதலாக வாங்கி இருக்கிறோம். ஒருவேளை சூழ்நிலை மாறினால் அதை சமாளிப்பதற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம்” என்றனர்.
அதேநேரம் அன்றைய தேவைக்கான பொருட்களை மட்டும் வாங்கிய மக்கள் சிலர் கூறும்போது, “சீனாவைப்போல ஒரு நிலை கண்டிப்பாக தமிழகத்தில் ஏற்படாது. தேவையில்லாமல் பதட்டம் அடைகின்றனர். மொத்தமாக பொருட்களை வாங்கினால், தட்டுப்பாடுகள் ஏற்படும் நிலை உருவாகிவிடும்” என்றனர்.