தண்டையார்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின்போது தேநீர் கடை பூமிக்குள் இறங்கி சேதம் அடைந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலைதண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகேமெட்ரோ ரயிலுக்கான தண்டவாளம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, திடீரென பூமியில் அதிர்வு ஏற்பட்டதால் அங்கிருந்த சுனில்குமார் என்பவருக்கு சொந்தமான டீக்கடை 4 அடி அளவுக்கு பூமிக்குள் இறங்கி சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸாரும், மெட்ரோ ரயில்அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சம்பவம் நடந்த இடத்தில் இரும்புத் தகடுகள் பூமியில் பொருத்தும் பணி நடந்ததும் அந்த இடத்தில் உறுதித் தன்மையற்ற மண் இருந்ததும் விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அங்குஏற்பட்ட பள்ளம் உடனடியாக கான்கிரீட் மூலம் சரி செய்யப்பட்டுவிட்டது.
அத்துடன், சேதமடைந்த கடையின் உரிமையாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.