கோவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடுத்த பூந்தமல்லி சிறப்பு முகாமில் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்த 23 பேர் வீடு திரும்பினர்.
உலகம் முழுவதும்கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்யும்போது யாருக்காவது, காய்ச்சல், இருமல்,தும்மல், சளி பிரச்சினை இருந்தால், அவர்கள் உடனடியாக அரசுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புமுகாம்களில் 24 மணி நேரம்தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதன்பின், அவர்கள் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனம், முகாமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 41 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், 24 மணிநேர கண்காணிப்பு நிறைவடைந்த 23 பேர் நேற்று வீடு திரும்பினர். மற்றவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். இதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பிரச்சினைகளுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 2 பேர் 14நாட்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
14 நாட்கள்
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமியிடம் கேட்ட போது, “முன்னெச்சரிக்கை தடுப்புநடவடிக்கையாக 24 மணி நேரம்முகாமில் இவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. 6 மணி நேரத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படும். 24 மணி நேர கண்காணிப்புக்கு பின்னர், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆனாலும், அவர்கள் வீட்டுக் கண்காணிப்பில் 14 நாட்கள் இருப்பார்கள். அதேநேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் மட்டும் முகாமில் 14 நாட்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்” என்றார்.
பூந்தமல்லி சிறப்பு முகாம்
பூந்தமல்லி சிறப்பு முகாமில்வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும், கவனித்துக் கொள்ளவும் 3 டாக்டர்கள், 3 செவிலியர்கள், 6 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த முகாமில் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்படும் பயணிகளுக்கு தேவையான உணவு, டீ, காபி, பால், பிஸ்கெட்,தண்ணீர் போன்ற அனைத்தும்இலவசமாக வழங்கப்படுகிறது. 6 மணி நேரத்துக்கு ஒருமுறை டாக்டர்கள் பரிசோதனை செய்கின்றனர். தூங்குவதற்கு மெத்தையுடன் கூடிய கட்டில், ஃபேன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
பயணிகள் 24 மணி நேர கண்காணிப்புக்கு பின்னரேவீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதுவரை அறைக்குள்ளே இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். உறவினர்கள், நண்பர்கள் யாரையும் பார்க்க அனுமதி வழங்கப்படுவதில்லை.
60 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.