தமிழகம்

கரோனா முன்னெச்சரிக்கை: தமிழக சிறைச்சாலைகளில் வழக்கறிஞர்களுக்கு கடும் கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சிறைச்சாலைகளில் கைதிகளைக் காணும் வழக்கறிஞர்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதித்து சிறைத்துறை டிஜிபி, அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் பொது சுகாதாரத்துறையும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைகள் அனைத்திலும் வழக்கறிஞர்கள் கட்சிக்காரர்களைச் சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

வழக்கறிஞர்கள் நேர்காணல் தேவைப்படும் நேரங்களில் அவசியம் கருதி கீழ்க்காணும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனுமதித்திட அறிவுறுத்தப்படுகிறது.

* நேர்காணல் காண வரும் வழக்கறிஞர்கள் சிறையில் அனுமதிக்கப்படும் முன் கைகளைச் சோப்பால் சுத்தம் செய்து கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும்.

* வழக்கறிஞர்கள் சிறைக்கைதிகளை நேர்காணல் செய்யும்போது அவர்கள் இடையே இடைவெளி சுமார் 6 அடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

* நேர்காணலுக்கு வரும் வழக்கறிஞர் மற்றும் சிறைவாசிகள் இருவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* வழக்கறிஞர் மற்றும் சிறைக் கைதிகள் ஒருவரை ஒருவர் தொடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

இதற்கான உத்தரவு அனைத்து மத்திய சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் பெண்கள் சிறை, புழல் சிறை, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை மற்றும் அனைத்துச் சிறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT