தமிழகம்

காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாணவர்கள்: தேடும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று காவிரி ஆற்றில் 2 இடங்களில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்தவர் சித்திக். நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரி யராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சல்மான்(15). கும்பகோணம் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர்கள் யாசர்(14), அனிபா(14) ஆகியோர் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 3 பேரும் கும்பகோணம் அருகேயுள்ள மணஞ்சேரி பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதேபோல, நேற்று மதியம் கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சஞ்சய்(15) என்ற 10-ம் வகுப்பு மாணவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இவர்கள் நால்வரையும் தேடும் பணியில் கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காவிரியில் பாசனத்துக்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நீச்சல் தெரியாததால் நால்வரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT