சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி என திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் என்.எஸ். நிஷா விளக்கம் அளித்தார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘உங்கள் மேடை - டிஜிட்டல் பெண்ணே’ என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) என்.எஸ்.நிஷா பேசிய தாவது:
தற்போதைய காலகட்டத்தில் செல்போன், இணையம் தவிர்க்க முடியாததாகி விட்டது. முகநூலில் பெண்கள் தங்களது படம், சுய விவரம், முகவரி, செல்போன் எண்கள், பயணத் திட்டம் போன்றவற்றை பதிவிடக் கூடாது. இவை அனைத்தும், ஏதோ ஒரு இடத்திலிருந்து குற்றவாளிகளால் கண்காணிக்கப்படுகின்றன. உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும், உடைமைகளை பறிகொடுக்கவும் நீங்களே அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள்.
உங்கள் புகைப்படத்தை பொதுப் பயன்பாட்டாளர்களுக்கான சமூக வலைதளத்தில் ஒருமுறை பதிவேற்றம் செய்துவிட்டால், அதை மீண்டும் முழுவதுமாக திருப்பி எடுக்க முடியாது. நீங்கள் அழித்துவிட்டாலும்கூட, இணைய பதிவுகள் வாயிலாக அப்படம் பலரிடம் கைமாறிச் சென்றுவிடும். அதை அவர்கள் எதற்கு பயன்படுத்துவார்கள் என்பது நமக்குத் தெரியாது. தேவையெனில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் தனியாக படங்களை அனுப்புங்கள்.
செல்போனில் தனியாகவோ, பிறருடனோ புகைப்படங்களை எடுக்கும்போதும், பதிவிடும்போதும் கவனமாக இருக்க வேண்டும். நாம் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் பின்னாளில் நமக்கே பாதிப்பை ஏற்படுத்துவதாக மாறிவிடக் கூடாது. இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று கணினியை பயன்படுத்தும்போது முறையாக லாக் அவுட் செய்து வெளியேற வேண்டும்.
செல்போன், இணைய வழியாக எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்களிடம் பேசுங்கள். நீங்களாக கையாள நினைக்கும்போதுதான் பிரச்சினை பெரிதாகிறது. செல்போன், இணைய வழியில் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் காவல் துறையில் புகார் தர தயங்கக் கூடாது. இதில் தாமதம் ஏற்படக்கூடாது. விழிப்புடன் இருந்தால் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளலாம் என்றார்.
அளவுடன் பயன்படுத்துங்கள்
திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத் துறைத் தலைவர் டாக்டர் ஏ.நிரஞ்சனாதேவி பேசியதாவது:
பயணம், பணியிடம், வீடு என அனைத்து இடங்களிலும் செல்போனை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. கண் வலி, முதுகு வலி, கை வலி போன்றவற்றுடன் தூக்கத்தையும் பாதிக்கிறது. இரவு நேரங்களில் செல்போனை பயன்படுத்திக் கொண்டே தூக்கத்தை தள்ளிப் போடுவதால், காலையில் எழுந்திருப்பது தாமதமாகிறது. உடலுக்கு முழுமையான தூக்கம் கிடைக்காததால் புத்துணர்ச்சியின்றி, நாள் முழுவதும் தேவையற்ற பதற்றம், பய உணர்வு, சோர்வு ஏற்படுகிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.
இந்த டிஜிட்டல் உலகத்தில் செல்போன்கள், இணையத்தை பயன்படுத்துவதில் தவறில்லை. வீடியோ கேம், ஷாப்பிங், சமையல் குறிப்பு, கல்வித் தேடல், தகவல் தொடர்பு என எதுவாக இருந்தாலும் அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது என்றார்.
முறையாக பயன்படுத்துங்கள்
ஐ-ஸோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.கேசவன் பேசியபோது, “சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்தினால் நிச்சயம் நம் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவும். ஓரிடத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை அடுத்த நொடியே உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆற்றல் சமூக வலைதளங்களுக்கு உண்டு. கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து தொடர்பான தகவல்களும் விரல் நுனியில் நொடிப்பொழுதில் கிடைக்க வழி செய்கின்றன. ஆன்லைன் வாயிலாக எண்ணற்ற வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. டிஜிட்டலில் நல்லதைத் தேடினால் நல்லது கிடைக்கும். கெட்டதைத் தேடினால் கெட்டதுதான் கிடைக்கும். எனவே நமது பார்வையும், நோக்கமும் சரியாக இருக்க வேண்டும்” என்றார்.
‘யோனோ' மொபைல் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்.பி.ஐ வங்கியின் திருச்சி மண்டல தலைமை மேலாளர் (டிஜிட்டல்) அசோக்குமார் அமரா, மேலாளர் (டிஜிட்டல்) சரவணன் ஆகியோரும், காவலன் செயலி குறித்து காவல் ஆய்வாளர் க.காவேரி சங்கரும் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியை எஸ்.பி.ஐ வங்கி, லலிதா ஜூவல்லரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி ஆகியவை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து வழங்கின.