ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மனு அளிப்பதற்காக பூம்புகார் பகுதி மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திரண்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் திரளானோர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அதிகமானோர் வந்ததால் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி மனு அளிக்க வந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களில் சிலர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று மனு அளிக்க அனுமதித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு விசைப்படகுக்கு தலா 60 மீனவர்கள் கூட்டு சேர்ந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் மீனவர்கள் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு அன்னிய செலாவணியை அதிக அளவில் ஈட்டித்தரும் நாங்கள் இத்தொழிலை நிரந்தரமாகச் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தொழில் செய்யவிடாமல் அதிகாரிகள் தடுக்கிறார்கள். தடுப்பது ஏன் என்று கேட்டால், இது அரசின் கொள்கை முடிவு என்கிறார்கள்.
எனவே, தமிழக அரசின் கொள்கை முடிவில் சிறிது மாற்றம் செய்து, ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல, அதிவேக இன்ஜினை பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.