செங்கல்பட்டு மாவட்டத்தில் குடி போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 2 இளைஞர்களை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலைநகர காவல் நிலைய உதவிஆய்வாளர் வாசுதேவன் தலைமையில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருக்கழுக்குன்றத்தை அடுத்த அகதீஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தசுரேஷ் (36) என்பவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அச்சோதனையில் சுரேஷ் மது அருந்தியிருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைதுசெய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 30-ம்தேதி வரை செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் சுரேஷை செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதே போல் கூடுவாஞ்சேரியில் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய உத்திரமேரூரைச் சேர்ந்த முருகன் (29) என்பரை கூடுவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் கைது செய்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தினார். இதையடுத்து ரஞ்சித்குமாரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: மோட்டாா் வாகன சட்டம்-1988, பிரிவு 202-ன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சட்டப்படி வழிவகை உள்ளது. எனவே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை போலீஸாா் சட்டப்படி கைது செய்து, பிரிவு 203-ன்படி, அவர்களை சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்பிறகு அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வழக்கில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செங்கல் பட்டு மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிவந்த சுரேஷ் மற்றும் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.