குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் முஸ்லிம்களை சந்தித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

வண்ணாரப்பேட்டையில் 32-வது நாளாக தொடர்ந்த முஸ்லிம்கள் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு

செய்திப்பிரிவு

குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ‘சென்னை ஷாகீன் பாக்’ என்ற பெயரில் கடந்த 14-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 32-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வண்ணாரப்பேட்டை போராட்ட களத்துக்கு நேற்று இரவு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது, "ஒற்றுமை உணர்வுடன் அமைதியாக அறவழியில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் உங்களுடைய போராட்டம் நடந்து வருகிறது. நான் நியாயமாக தொடக்கத்திலேயே உங்களை சந்தித்து வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். திமுகதான் போராட்டத்தை தூண்டிவிடுகிறது என்று ஆளும் கட்சியினர் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து சொல்லி வருவதால் நான் தவிர்த்தேன். ஆனாலும், திமுகவினர் உங்களுக்கு ஆதரவாக துணை நின்று வருகிறார்கள்.

நான் தற்போது உங்கள் போராட்டத்துக்கு வலு சேர்க்க, ஆதரவு தெரிவிக்க வந்திருந்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், உங்களிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைக்கிறேன். தற்போது கோவிட் 19 பாதிப்பு பரவி வருகிறது. எனவே உங்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவையுங்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவோம்" என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் பேசி முடிந்தவுடன் போராட்டக் குழுவினர் பேசும்போது, "சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்" என்று உறுதியாக கூறினர்.

SCROLL FOR NEXT