`கோவிட்-19' வைரஸ் வேகமாக பரவிவருவதால் சென்னை விமான நிலையத்தில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த 14 பேருக்கு வைரஸ் அறிகுறி இல்லை- தனிமைப்படுத்தி கண்காணிப்பு

செய்திப்பிரிவு

துபாய் வழியாக சென்னை வந்த 14 பேருக்கு வைரஸ் அறிகுறி இல்லை. அவர்கள் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவிட்-19 வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்யும்போது, அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறிகள் இல்லாதவர்களை 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கின்றனர். பொது இடங்களுக்கு செல்லக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 14 பேர் துபாய் வழியாக சென்னைக்கு நேற்று வந்தனர். மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. இவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, அவர்கள் சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சுகாதாரத் துறைக்கு சொந்தமான பொது சுகாதார நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த 14 பேருக்கும் வைரஸ் அறிகுறிகள் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அனைவருக்கும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்’’ என்றார்.

அரசு எச்சரிக்கை

வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம், சோப், சானிடைசர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படியும் விலையின்படியும் விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT