கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றம்போல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கும்படி தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று முறையீடு செய்தனர். அதைத் தொடர்ந்து அரசு தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமை நீதிபதி ஆலோசனை மேற்கொண்டார்.
கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலால் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியிடம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் உள்ளி்ட்ட பலர், கோவிட்-19 வைரஸ் பிரச்சினை தீரும்வரை உயர் நீதிமன்றத்திலும் நாளை முதல் (மார்ச் 18) அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையீடு செய்தனர்.
தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் செயல்படும் சங்க அலுவலகங்கள், கேன்டீன், நூலகம் போன்றவற்றை மூடவும், மே மாதத்தில் விடப்படும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கோவிட்-19 வைரஸ் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகலில் நடைபெற்றது.
இதில் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்றனர். இக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
மருத்துவ பரிசோதனைக் குழு
இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘கோவிட் -19 வைரஸ் பரவாமல் தடுக்க உயர் நீதிமன்றத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், விமான நிலையத்தில் உள்ளதுபோல தெர்மல் ஸ்கிரீனரால் நீதிமன்றத்துக்குள் வருபவர்களை பரிசோதிக்கவும், மருத்துவ பரிசோதனை குழுக்களை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
நாளை (மார்ச் 18) முதல் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல, உயர் நீதிமன்றத்தில் செயல்படும் வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் கேன்டீன்ஆகியவை நாளை முதல் மார்ச் 31 வரை மூடப்படும்’’ என்றார்.
இந்நிலையில், ‘‘தனது நீதிமன்ற அறைக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள் வருகைதர வேண்டாம்’’ என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நோட்டீஸ் மூலமாக அறிவிப்பு செய்துள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் இதுதொடர்பாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார்.
கோவிட் -19 பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் நீதிமன்றம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், வழக்காடிகளின் நலன் கருதி கீழமை நீதிமன்றங்களிலும் அவசர வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அவசர வழக்குகளை விசாரித்தாலும் தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும், என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.