மதுரையில் சாலைகளில் திரியும் கால்நடைகளை அகற்ற குழு அமைக்கவும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்தியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”திருமோகூர் புதுதாமரைப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது சாலையில் 10 முதல் 15 மாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அதில் இரு மாடுகள் என் வண்டியில் மோதியதில் நான் கீழே விழுந்து காயமடைந்தேன்.
ஒத்தக்கடை- திருவாதவூர் சாலையில் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. பகல், இரவு என்று பாராமல் சாலைகளில் நடமாடுவதும், படுத்து இளைப்பாறுவதுமாக மாடுகள் உள்ளன. இதனால் சாலையில் செல்வோர், பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே மதுரையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும், சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சாலைகளில் கால்நடைகள் திரிவது தொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும் தான் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, இது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.