தமிழகம்

கரோனா முன்னெச்சரிக்கை: அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தேவையில்லாமல் கூடுவதைத் தவிர்க்கவும்- தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவிட்- 19 வைரஸ் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

பொது இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் போன்ற இடங்களில் தினமும் சுத்தம் செய்து கண்டிப்பாக கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு குறித்து இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படும்.

மேலும், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களிலும் 100 சதவீதம் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படவுள்ளது.

அடுத்த 15 நாட்களுக்கு தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் இடையே குறைந்தது 1 மீட்டராவது இடைவெளி இருக்க வேண்டும்.

மக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வணிக வளாகம், தியேட்டர், விழாக்கள் போன்ற நிகழ்வுகளை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்த்தால் நல்லது.

பொதுமக்கள் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு கூட்டமாக வருவதையும் தவிர்க்க வேண்டும். முக்கியமான, மிகவும் தேவையான மனு என்றால் மட்டுமே வரவேண்டும்.

இல்லையெனில் அடுத்த 15 நாட்களுக்கு மனு கொடுக்க வரலாம். இதன் மூலம் கோவிட்- 19 வைரஸ் மக்கள் மத்தியில் பரவுவதை தடுக்க முடியும்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தான் கோவிட்- 19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இன்னும் பரவத் தொடங்கவில்லை.

எனவே, இந்த காலக்கட்டம் மிகவும் முக்கியமானதாகும். மக்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பது தான் இப்போதைய பணி. அதற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்- 19 வைரஸ் பாதிப்புக்கு என ஏற்கனவே தனியாக ஒரு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 15 படுக்கை வசதி உள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்தில் மேலும் ஒரு தனி வார்டு 30 முதல் 40 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல போதுமான அளவுக்கு முககவசம் போன்ற நோய் தடுப்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்- 19 வைரஸ் பரிசோதனைக்கு தனி ஆய்வகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் பரிசோதனையை விரைவாக செய்து முடிவை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

நமது மாவட்டத்தை பொறுத்தவரை இன்றைய தேதியில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர், அவர்களது வீடுகளிலேயே தனிமையில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமும் மருத்துவ பணியாளர்கள் மூலம் இவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் யாருக்கும் கோவிட்- 19 வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லை. தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மேலும் வதந்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

முதல்வர் உத்தரவுபடி மாவட்டத்தில் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அரசு எந்த அறிவுரையும் வழங்கவில்லை.

எனவே, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே வாஷ் பேஷின் வைக்கப்படவுள்ளது. உள்ளே வரும் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவிய பிறகே உள்ளே வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

முன்னதாக தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,400 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.82 லட்சம் மதிப்பிலான செயற்கைகால் உதவி உபகரணங்கள் உள்ளிட்ட 16 பயனாளிகளுக்கு ரூ.8.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 3 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா (பொது), சிதம்பரம் (சத்துணவு), கிறிஸ்டி (கணக்கு), மாவட்ட கருவூல அலுவலர் பாமினி லதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT