செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வந்த, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையாவிடம், செய்யூர் எம்எல்ஏ மீது புகார் தெரிவித்து அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து பள்ளியிலிருந்து வெளியே வந்த அமைச்சரை பெண்கள் முற்றுகையிட்டனர்.
செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜீ, அனைத்து வளர்ச்சி திட்டங்களையும், தான் வசிக்கும் பவூஞ்சூர் பகுதிக்கே கொண்டு சென்றுவிடுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் செய்யூர் பகுதிக்கு அரசு வழங்கும் மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பெற்று தராமல் உள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பெண்கள் வலியுறுத்தினர்.
அமைச்சர் சின்னையா, ‘எம்எல்ஏ ராஜீயிடம் விசாரித்து அனைத்து விதமான நலத்திட்டங்களும், செய்யூர் பகுதிக்கு பெற்று தருவதாக’ உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.