தமிழகம்

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தை மூடக்கோரிய மனு தள்ளுபடி

கி.மகாராஜன்

திருச்சியில் செயல்படும் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மூடக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த தீபக் பி நம்பியார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருச்சி எம்ஆர் பாளையம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 2009 முதல் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்படுகிறது.

இந்த மையத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி வனவிலங்குகள் மீட்பு மையங்கள் உயிரியியல் பூங்கா பட்டியலில் வருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி மத்திய உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாமல் உயிரியல் பூங்கா திறக்க முடியாது.

இதனால் திருச்சி எம்ஆர் பாளையத்தில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மத்திய அரசின் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக செயல்படுகிறது.

மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை யானைகள் மறுவாழ்வு மையத்துக்காக கால்நடை மருத்துவமனை, மருந்தகம், சமையலறை, உணவுப்பொருள் பாதுகாப்பு அறை, கழிவறைகள், நடைபாதைகள் அமைத்துள்ளனர்.

இந்த மையத்தில் தற்போது 5 யானைகள் உள்ளன. இந்த யானைகளை பறிமுதல் செய்யப்பட்ட நபர்களிடம் மீண்டும் வழங்கவும், மத்திய அரசு அனுமதி பெறும் வரை எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை பொதுநல மனுவாக ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT