தமிழகம்

கரோனா தடுப்பு; முகக் கவசங்கள் பதுக்கலைத் தடுக்க அரசே விற்பனை செய்ய வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கோவிட்-19ஐ உருவாக்கும் சார்ஸ் கரோனா வைரஸ் -2 வின், மரபியல் மற்றும் தொற்றும் தன்மைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் , கோவிட் -19-ன் தீவிரத் தன்மையை அதிகரித்துள்ளன. அதைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜிஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் கோவிட் -19 பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் -19ஐத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. மக்கள் நெருக்கமாகக் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என சர்வதேச பொது சுகாதாரத்துறை நிபுணர்களும், உலக நல நிறுவன நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைக் கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் பொதுமக்களை, பெரும் எண்ணிக்கையில், அச்ச உணர்வுடன் ஒன்று திரண்டு போராட வைத்துள்ள, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கோவிட் -19 தடுப்பை விட, பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பிரச்சினை, அவசரமான அதிமுக்கியப் பிரச்சினையல்ல.

நமது மக்களின் உடல் நலனையும், உயிரையும், பொருளாதாரத்தையும் காப்பதுதான் மிக முக்கிய தலையாயப் பிரச்சினை. கோவிட் -19 தடுப்பிற்கு, நாட்டில் அமைதியான சூழலையும், பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் அனைத்துப் பகுதி மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து குடிமக்களையும் கோவிட் -19 தடுப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, அதை உணர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் .

* சிஏஏவைத் திரும்பப் பெற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

* இந்தியாவில் இதுவரை 84 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் 19 பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* கோவிட்-19ஐ உருவாக்கும் சார்ஸ் கரோனா வைரஸ் -2 வின், மரபியல் மற்றும் தொற்றும் தன்மைகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் , கோவிட் -19-ன் தீவிரத் தன்மையை அதிகரித்துள்ளன. இத்தகைய மாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு கோவிட்-19 தடுப்பு மற்றும் சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

* மருத்துவ சிகிச்சை வழங்கும் குழுவினருக்கு பாதுகாப்பு முகக் கவசங்கள், உடைகள் முதலியவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்புக் கவசங்கள் குறைந்த விலையில் அரசே வழங்க வேண்டும். அவற்றை அரசே விற்பனை மையங்களைத் தொடங்கி வழங்க வேண்டும். விற்பனை செய்யப்படும் இடங்களை அறிவிக்க வேண்டும்.

* கை சுத்தப்படுத்தப் பயன்படும் நுண்ணுயுரி கொல்லி மருத்துவ திரவங்கள், மருந்துகள், கையுறைகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றின் தட்டுப்பாடு, பதுக்கல், விலையேற்றம் உள்ளிட்டவற்றைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும். பதுக்கல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோவிட்-19 குறித்து தவறான, அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புவோர் மீதும், போலி மருத்துவ அறிவியல் கருத்துகளைப் பரப்புவோர் மீதும் மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில், அறிவியல் ரீதியான கருத்துகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். மூட நம்பிக்கைகள், தவறான கருத்துகள், போலி மருத்துவ அறிவியல் கருத்துகளைப் புறந்தள்ள வேண்டும்''.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT