தமிழகம்

காந்தாரி அம்மன் சிலை விவகாரம்: சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

த.அசோக் குமார்

சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு வருகிற 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனைகளுடன் அனுமதி பெற்று, சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இரு வேறு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 14.3.1992 அன்று அம்பிகாபதி, சக்கரைப்பாண்டி, சுப்பையா, அன்பு ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நடந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து 2001-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட 4 பேருக்கும், கடந்த 14-ம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி குறிஞ்சாக்குளம் கிராமத்தில் நடத்தவும், சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்தன. இதையடுத்து, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், ஜாதிரீதியான மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 144 (1) மற்றும் (2)-ன்படி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனைகளுடன் அனுமதி பெற்று, சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, மண்டலச் செயலாளர் ஐகோர்ட் பாண்டியன் தலைமை வகித்தார். மார்க்;சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாக்குளத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக முடக்கப்பட்டுள்ள காந்தாரி அம்மன் கோவில் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காந்தாரியம்மன் சிலையை குறிஞ்சாக்குளம் கிராமத்தில் உள்ள கோவில் கட்டுமான குழுவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

குறிஞ்சாக்குளம் பொது மைதானத்தில் நடைபெற்று வந்த புத்தாண்டு விழா, பொங்கல் விழா, குழந்தை தெரசா தேர் பவனி உள்ளிட்ட அனைத்து பண்பாட்டு நிகழ்வுகளும் தடையின்றி நடந்த ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT