துப்புரவுப் பணியாளர் மரணங்கள் தமிழகத்தில்தான் அதிக அளவில் உள்ளன என்று தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி கவலை தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் துப்புரவுப் பணியாளர்கள் குறைதீர் கூட்டம் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தலைமை வகித்து, துப்புரவுப் பணியாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நாடு முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள் சட்டம் 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி மனிதர்கள் மனிதக் கழிவுகளை அகற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 21 ஆயிரம் பேர் இத்தகைய பணியில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் அதிக அளவில் துப்புரவுப் பணியாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சுய தொழில் செய்யவும், அவர்களுக்கு மாற்றுப் பணி ஏற்படுத்தவும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
துப்பரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை.
மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வீடு, சுகாதாரம் மற்றும் கல்வி வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
துப்பரவுப் பணியாளர்கள் மரணங்கள் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இதுவரை 110 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகாவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மரணம் அடைந்த துப்புரவுப் பணியாளர்கள் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சமும், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ரூ.7.25 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
துப்பரவுப் பணியாளர்களின் மரணங்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் மாநிலங்கள் அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், வரும் மே மாதம் பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். தற்போது, ஐஐடியில் வடிவமைக்கப்பட்ட கையுறைகள், முகக் கவசங்கள் மற்றும் காலணிகள் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்".
இவ்வாறு தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.