அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 362 பேரை விடுவித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டில் பங்கேற்க வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பாமக தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் மாவட்டக் காவல்துறை, 3 பேரும் விபத்தில் உயிரிழந்ததாகப் பதிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையை கண்டித்தும் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால், காவல் துறையின் உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விழுப்புரம் நகரக் காவல் துறை சார்பில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராமதாஸ் உள்ளிட்ட 362 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதை எதிர்த்து பாமக சார்பில் எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் குற்றப்பத்திரிகை காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபரகள் ஒருநாள் கூட நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை இன்று (மார்ச் 16) விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, காலம் கடந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி, வழக்கிலிருந்து ராமதாஸ் உள்ளிட்ட 363 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.