அருங்காட்சியகங்கள் அமைந்த பின்பு கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல் சுற்று லாவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை அமைச்சர்கள் க.பாண்டியராஜன், ஜி.பாஸ்கரன், எம்.எல்.ஏ நாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியதாவது: ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவை வெளியிட மத்திய தொல்லியல்துறையை வலியுறுத்தியுள்ளோம். விரைவில் அந்த அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் நடைபெறவுள்ள கீழடி அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்பார்.
ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடி ஆகிய 3 இடங்களில் அமையவுள்ள அருங்காட்சியகங்கள் உலகத் தரத்தில் இருக்கும். இதை வைத்து தொல்லியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
கொந்தகை கோயிலில் இருந்த சில கல்வெட்டுகள்தான் கீழடி பகுதியில் அகழாய்வு செய்ய காரணமாக இருந்ததாக மத்திய தொல்லியல்துறை தெரிவித் துள்ளது. இந்த ஆய்வில் மத அடையாளங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் இல்லை. அரிக்கமேடு உள்ளிட்ட 63 அகழாய்வு அறிக்கைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் கீழடி அறிக்கைக்கு பிறகு தான் அனைவருக்கும் அகழாய்வு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கைகளும் மீண்டும் வெளியிடப்படும்.
பழங்காலத்தில் பாண்டி யர்களின் தலைநகராக மணலூர் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மரபணு ஆய்வு செய்ய உள்ளோம். மரபணு ஆய்வகத்தை தமிழ் பல்கலைக்கழகத்திலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தொல்லியல் அகழாய்வு பகுதி களை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். கோவிட்-19 பாதிப்பை தடுக்க சுகாதாரத் துறையினர் ஆலோசனையின்படி பாது காப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு பிறகு சுத்தம் செய்யும்போது சோழர்கால ஓவி யங்கள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.