தமிழகம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமே தவறானது: பழனிவேல் தியாகராசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் கமிஷன் பெறு வதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு தவறான திட்டம் என, பழனி வேல் தியாகராசன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ. பிடிஆர். பழனிவேல் தியாகராசன் தனது சட்டப் பேரவை அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் ஒன்றைத் தொடங்கி வைத்தார். இங்கு பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களும் கட்டணமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதில் குடியுரிமைச் சட்டமும் அடங்கும். குடியுரிமைச் சட்டத்துக்காக மக்கள் சான்றிதழ் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு அலைகின்றனர். இதை மனதில் கொண்டு எனது தொகுதி மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களைப் பெற இந்த இ- சேவை மையத்தைத் தொடங்கியுள்ளேன். இதற்காக 3 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை நகரில் வார்டு வரையறையில் அமைச்சருக்கு அதிகாரிகள் சாதகம் செய்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகளை அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர்.

மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பதில்லை. மக்களின் தேவை அறிந்து செயல்படாத இத்திட்டம் தவறானது. கமிஷன் பெறுவதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட் டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் பேவர் பிளாக் கல் பதிப்பது, மதுரையின் அடையாளமான தமுக்கத்தில் நிரந்தர கண்காட்சி மையம் அமைப்பது எல்லாம் தேவையற்றது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை எப்படியாவது செலவிடும் நோக்கில் இது போன்ற தேவையற்ற செயல்களை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT