மனோஜ் முத்தரசு
தாட்கோவின் மானியத்துடன் கூடியரூ.40 கோடி கடன் நிலுவைத் தொகையை வங்கிகள் உடனே வழங்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் தோட்டக்கலை, கோழிப்பண்ணை அமைத்தல், வாகனம் வாங்குதல், பட்டறை அமைத்தல், அழகு நிலையம் அமைத்தல், சிறு வணிக கடைகள், மருத்துவ கிளினிக், ஒப்பனையாளர், கணினி மையம் உள்ளிட்ட 77 திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் மானிய அடிப்படையில் பல்வேறு திட்டங்களுக்காக கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இக்கடன் வசதியைப் பெற விரும்பும் ஆதிதிராவிட மக்கள்தாட்கோவில் விண்ணப்பிக்கவேண்டும். அதை, தாட்கோ சரிபார்த்து வங்கிகள் மூலம்விண்ணப்பதாரருக்கு கடன் தொகை வழங்கும்.
விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்போது, அவர் கணக்கு வைத்துள்ள வங்கியின் மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு (நோடல் அலுவலகம்) அவருக்கான மானியத் தொகையை (நான்கில் ஒரு பங்கு) தாட்கோ வழங்கும். பின்னர், மானியத்துடன் கூடிய கடன் தொகையை பயனாளிகளுக்கு வங்கிகள் வழங்கும். அதன்படி,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்மூலமாகவும், தனியார் வங்கிகள்மூலமாகவும் விண்ணப்பதாரர் களுக்கு கடன் தொகையை தாட்கோ வழங்கி வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரரின் மானியத் தொகையை வங்கிகளுக்கு ஏற்கெனவே தாட்கோ செலுத்தி விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக விண்ணப்பதாரருக்கு நிதி வழங்காமல் தேசியமயமாக்கப்பட்ட முக்கிய வங்கிகள் தாமதித்து வருகின்றன.
குறிப்பாக, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய4 வங்கிகளில் மட்டும் பயனாளர்களுக்கு செல்லவேண்டிய தாட்கோவின் நிதி சுமார் ரூ.33.64 கோடி முடங்கி உள்ளது. இதனால்,2,219 பயனாளிகள் இன்னும் பயன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதிகபட்சமாக இந்தியன் வங்கியில் 939 பயனாளிகளுக்கு வழங்கவேண்டிய ரூ.14.98 கோடி நிதி முடங்கி உள்ளது.
மேலும், கனரா வங்கியில் 452 பயனாளிகளின் ரூ.6.64 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 463 பயனாளிகளின் ரூ.6.49 கோடியும், பாரத ஸ்டேட் வங்கியில் 365 பயனாளிகளின் ரூ.5.51 கோடியும் முடங்கி உள்ளன. அதேபோல், இதர தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் சுமார் ரூ.6.5 கோடி அளவுக்கு தாட்கோவின் மானியத் தொகை முடங்கி இருப்பதால், கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறாமல் உள்ளனர்.
தாட்கோவின் மொத்த மானியத் தொகையான ரூ.40 கோடி மட்டுமல்லாது, பயனாளிகளுக்கு வங்கிகள் வழங்கவேண்டிய கடன் தொகையுடன் சுமார் ரூ.160 கோடி நிலுவையில் உள்ளது. இந்த தொகையானது பயனாளிகளுக்கு முறைப்படி செல்லவேண்டும். ஆனால், பயனாளிகளுக்கு வழங்காமல் வங்கிகள் ஆதாயம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், மானியத்துடன் வழங்க வேண்டிய கடன் தொகையை உடனே வழங்கவேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஜே.விஜயராணி கூறும்போது, “வங்கியில்பயனாளிகளுக்குச் செல்லவேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வங்கிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,கடன் தொகையை வங்கிகள் விரைவாக வழங்கி வருகின்றன. மேலும், நிலுவையாக வைக்கப்பட்டுள்ள மானியத் தொகை ரூ.40 கோடிக்கும் உரிய வட்டித் தொகையை தாட்கோவுக்கு வங்கிகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையே தேசிய துப்புரவுதொழிலாளர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் 267 துப்புரவு பணியாளார்களுக்கு சுமார் ரூ.7 கோடிஅளவுக்கு கடனுதவி வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியில் பயனாளிகளுக்கு செல்ல வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வங்கிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.