தமிழகம்

முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சர்களின் வேலை இல்லை: விருதுநகர் எம்.பி. கண்டனம்

இ.மணிகண்டன்

உலகையே கரோனா வைரஸ் (கோவிட் 19) அச்சுறுத்தி வரும் நிலையில், முதல்வர், அமைச்சர்கள் மக்களைப் பெருந்திரளாகக் கூட்டி விழாக்களை நடத்துவது கண்டனத்துக்குரியது என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.

முன்னதாக, மதுரை வந்த முதல்வருக்கு கப்பலூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் மக்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல், திண்டுக்கல் நிகழ்ச்சியிலும் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மதுரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..

இவற்றைச் சுட்டிக்காட்டிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் ரத்தாகி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் வருகைக்காக மதுரையில் வரவேற்பு, திருமங்கலத்தில் வரவேற்பு, பெருங்கடியில் வரவேற்பு என ஊர் ஊருக்கு அப்பாவி பொதுமக்களை சாலைகளில் நிறுத்திவைத்துள்ளனர். ரூ.200 கொடுத்து மக்களை நிறுத்தியிருப்பது அவலம்.

பிரதமர் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். மற்ற அமைச்சர்களுக்கும் இது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வந்துவிட்ட நிலையிலும் முதல்வரும், அமைச்சர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

வளர்ந்த நாடுகளே பார்த்து அஞ்சிக்கொண்டிருக்கும் கரோனாவை பொறுப்பற்ற விதத்தில் அணுகுவதும் கண்டிப்புக்குரியது.

முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சரின் வேலை இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT