டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

மூன்றாவது ஆண்டில் அமமுக; ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக லட்சியப் பாதையில் பயணிப்போம்: தினகரன்

செய்திப்பிரிவு

ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக லட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அமமுக கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தினகரன் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மார்ச் 14) தன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

"எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அடியொட்டி வந்த லட்சோப லட்சம் தொண்டர்களின் உணர்ச்சிப் பிரவாகத்தில், நியாயத்தின் சுடரொளியாக, அதர்மத்தை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டிட இரண்டாண்டுகளுக்கு முன் உங்களால் உருவாக்கப்பட்ட அமமுக வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஜெயலலிதாவின் பேரியக்கத்தையும், அந்த இயக்கத்திடம் இருந்த தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக துரோகிகள் அடகு வைத்தபோது ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக்குமுறலின் வெளிப்பாடே அமமுக.

ஜெயலலிதாவின் பெயரை இயக்கத்தில்கொண்டு அவரின் திருவுருவம் தாங்கிய கொடியை, மறைந்த மேலூர் ஆர்.சாமிக்குச் சொந்தமான இடத்தில் ஏற்றி வைத்து, மதுரை மேலூரில் மார்ச் 15, 2018-ல் இந்த இயக்கம் முகிழ்த்து எழுந்தது. பணம், பதவி இவற்றை எல்லாம் துச்சமென நினைத்து ஜெயலலிதாவின் கொள்கைகளைக் காப்பதும், அவர்கள் வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதுமே தலையாய கடமை என்ற எண்ணத்துடன் களமிறங்கிய நீங்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி.

நமது இயக்கம் முத்தான மூன்றாம் ஆண்டில் கால் பதித்திருக்கும் இந்த நல்ல நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நீங்கா நினைவுகள் காற்றலைகளில் கலந்திருக்கும் சென்னை, ராயப்பேட்டையில் நமக்கு புதிய தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் ஆசியோடு இங்கிருந்து சட்டப்பேரவைத் தேர்தல் வேலைகளைப் புத்தம் புது உற்சாகத்தோடு தொடங்கி இருக்கிறோம். பதிவு பெற்ற கட்சியாக ஒரே சின்னத்தில், வெற்றிச் சின்னத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம்.

அதற்கு முன்னோட்டமாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் வாகை சூடும் வகையில் நம்முடைய பணிகள் அமையவிருக்கின்றன. அவற்றில் நாம் பெறுகிற வெற்றி, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு கட்டியம் கூறப்போகிறது.

துரோகிகளைப் பொறுத்தமட்டில் ஆட்சி முடிந்ததும் கிடைத்தவரை லாபம் என்று மூட்டை கட்டி தோளில் போட்டுக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பற்றியும் கவலை இல்லை. தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலை கிடையாது. சம்பந்திகளின் நலன், சகலபாடிகளின் வசதி வாய்ப்புகளைப் பற்றியே சிந்திக்கிற இவர்கள் இயக்கம் குறித்தும், நாட்டு மக்கள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்? அதனால் ஆட்சியின் அந்திம நேரம் நெருங்கும்போது நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதைப் போல சிதறத்தான் போகிறார்கள்.

இதை எண்ணி பயந்து கொண்டுதான், நாம் அமைதியாகிவிட்டோம் என்பது போன்ற பொய் பிம்பத்தை ஊடகங்களின் இருட்டடிப்பு வழியாக சிலர் உருவாக்க முனைகிறார்கள். ஆனால், அதனை எல்லாம் உடைத்து நொறுக்கிவிட்டு, ஆயிரமாயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களின் உணர்வையும், எழுச்சியையும் அத்தனை எளிதில் யாராலும் அடக்கிவிட முடியாது என்பதற்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பதித்த முத்திரையும், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி திருநெல்வேலி கங்கைகொண்டானில் கடல் அலையைப் போல திரண்ட தீரர் கூட்டமுமே சாட்சியாக அமைந்தது.

அன்றைய தினமும், அதன் தொடர்ச்சியாகவும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை நாம் கொண்டாடி வரும் அளவுக்கு உணர்வோடும், உரிமையோடும், உண்மையோடும் வேறு யாரும் கொண்டாடிடவில்லை என்பதற்கு தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் அமமுக நிகழ்ச்சிகளே ஆதாரம். நம்முடைய இப்புனித லட்சியப் பயணத்தில் ஏதேனும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்தான் சசிகலா பற்றி அக்கறையோடு பேசுவதைப் போல துரோகக் கூட்டம் நடிக்கிறது.

சிங்கம் சிறைபட்டு இருக்கிறதே என்று சிறு நரிகள் கவலைப்படுவது வேடிக்கையல்லவா?! சாப்பிட்ட கையின் ஈரம் காய்வதற்குள் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த இந்தத் துரோகிகளோடு சசிகலா சேருவார் என்று சொல்வது அவர்களையே அவமானப்படுத்துவது போலாகாதா? எனவே இந்த சூதுமதியாளர்களின் செப்படி வித்தைகளை எல்லாம் இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு நம்முடைய லட்சியப் பயணத்தைத் தொடருவோம்.

தேர்தல் நெருங்குவதால் நாளொரு வேஷம் போடும் வேலைகளில் பழனிசாமி கூட்டம் மேற்கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, எட்டுவழிச்சாலையை கொண்டுவரத் துடிக்கும் பழனிசாமி, இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் என்ற புதிய அரிதாரம் பூசியிருக்கிறார்.

ஏற்கெனவே உள்ள எண்ணெய் கிணறுகளையும், எரிவாயு திட்டங்களையும் பற்றி வாய் திறக்காமல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். நீட் விவகாரத்தில் எப்படி ஒரு கபட நாடகமாடினார்களோ அதேபோலே இப்போதும் ஒரு நாடகம். இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.

இதேபோல மக்களை ஏமாற்றுவதில் திமுக தனது பங்கையும் ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே தீங்கிழைத்த பல திட்டங்களை முன்னெடுத்தது திமுக கூட்டம்தான். டெல்டா பகுதியில் எரிவாயுத் திட்டங்களுக்கு ஒப்பந்தம்போட்டுவிட்டு இன்று அதை எதிர்க்கும் வேலையை செய்கிறார்கள்.

இதைப்போலத்தான் முஸ்லிம்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிற என்ஆர்சி 2003-ல் கொண்டுவந்தது திமுக அங்கம் வகித்த வாஜ்பாய் அரசுதான். அதேபோல் என்பிஆரை 2010-ல் செயல்படுத்தியது திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் அரசுதான். அப்போது ஆதரவு அளித்துவிட்டு இப்போது எதிர்ப்பது என்பது திமுகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இது சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அரசியல் பித்தலாட்டமாகும்.

மதச்சார்பற்ற நாட்டில் எல்லோரும் சமமான உரிமையுடனும், பயமின்றியும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் சிஏஏ விவகாரத்தில் மத அடிப்படையில் மக்களை அணுகுவதை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழகம் முழுவதும் இது தொடர்பாக நடக்கும் போராட்டங்களில் அமமுக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஜெயலலிதா இல்லாத சூழலையும், பழனிசாமி அடிக்கும் கூத்துகளையும் பயன்படுத்திக்கொண்டு நமக்கும், தமிழ்நாட்டின் நலன்களுக்கும் பரம்பரை எதிரியான திமுக, எப்படியாவது மீண்டெழுந்துவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது. அதனை வெறும் பகல் கனவாக்கி, தமிழகத்தில் மீண்டும் உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நம்முடைய உழைப்பை ஒருமுகப்படுத்துவோம்.

தமிழகத்திற்கு தீங்கிழைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்திடுவோம். அதற்கான உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடும் போர்க்குணத்தோடும், ஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டிகளாக லட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம், வென்றிடுவோம்" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT