டாஸ்மாக்கில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஏப்ரல் முதல்ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்றுநடந்தது. இதில் அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக்கில் 25,697 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு மாததொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15.42 கோடி நிதி ஒதுக்கப்படும்.
உணவு பாதுகாப்பு, தர நிர்ணய(மதுபானங்களின் தரங்கள்) ஒழுங்குமுறையின்கீழ், மதுபானபாட்டில்களில் ஒட்டப்படும் லேபிள்களில் ‘மது அருந்துதல் உடல்நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்’ என்று அச்சடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த நிதிஆண்டு முதல், மது அருந்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன், மது அருந்திவிட்டு வாகனம்ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் இணைத்து மேற்கொள்ள ரூ.3.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பணியாளர் சங்கம் அதிருப்தி
இதற்கிடையே, டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிப்பதாக அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர்கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் மட்டுமே ரூ.500 உயர்த்தப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. அவர்கள் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம்செய்ய வேண்டும், அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்படும் என்றுஎதிர்பார்ப்புடன் மானியக் கோரிக்கையை எதிர்பார்த்திருந்த நிலையில், தொகுப்பூதியம் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இப்பிரச்சினை குறித்து சங்கத்தின் மாநில பொதுக் குழுவைக் கூட்டி விவாதித்து, அதனடிப்படையில் போராட்ட அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.