மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இதுதொடர் பாக நேற்று நடந்த விவாதம்:
ஆஸ்டின் (திமுக): நாட்டில் நடைபெறும் பெரும்பான்மை குற்றங்களுக்கு பின்னணி மதுபானம்தான். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று மதுபான கடைகளில் அளிக்கப்படும் ரசீதில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அரசே இவ்வாறு கூறிவிட்டு அவர்களுக்கு மதுவை கொடுத்து குடிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்.
அமைச்சர் பி.தங்கமணி: உங்கள் ஆட்சிக்காலத்தில் என்ன, திருக்குறளா எழுதியிருந்தது. மது குடிப்பவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. உங்கள் ஆட்சியில் 2006-11ல் அதற்கான நிதியும் நிறுத்தப்பட்டது. மலிவு விலை சாராயம் யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.
ஆஸ்டின்: அரசே மதுவை விற்கும் கொள்கையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அந்த அரசு விற்கும் மதுவிலேயே இந்த வாசகம் இடம் பெற்றுள்ளதே என்பதுதான் எனது கேள்வி. சிகரெட் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் உள்ளது. அது தனியார் விற்பனை செய்வது.
அமைச்சர் பி.தங்கமணி: அரசு மதுபான விற்பனையை எடுத்து அரசுக்கான வருவாயை பெருக்கி வருகிறோம். மது குடிப்பது, நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பதில் யாருக்கும் வேறு கருத்து இல்லை. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் வந்து உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.