தமிழகம்

மக்களிடம் எழுச்சி ஏற்படுவதாக நம்பிக்கை; கட்சி தொடக்கம் குறித்து ஒரு வாரத்தில் ரஜினி முடிவு: முதல் பொதுக்கூட்டத்தை எங்கு நடத்தலாம் என தீவிர ஆலோசனை

மகராசன் மோகன்

தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான தனது அறிவிப்பு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாக ரஜினி கருதுகிறார். இதில் உற்சாகம் அடைந்துள்ள அவர் அரசியல் கட்சி தொடங்குவது, முதல் பொதுக்கூட்டத்தை நடத்துவது ஆகியவைதொடர்பான முக்கிய அறிவிப்புகளை ஒரு வாரத்துக்குள் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் எப்போது என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் செய்தியாளர்களை அவர் நேற்று முன்தினம் சந்தித்தார்.

அப்போது, ‘‘தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். அதற்கான வெற்றிடம் இருக்கிறது. அரசியல் மாற்றம் இப்போது இல்லாவிட்டால், இனி எப்போதுமே இல்லை. நல்ல தலைவர்களை உருவாக்குபவனே ஒரு நல்ல தலைவன். இளைஞராக, படித்தவராக, தொலைநோக்குப் பார்வை உள்ளவராக, அன்பு, பாசம், தன்மானம் கொண்டவராக இருக்கும் ஒருவரைத்தான் முதல்வராக அமரவைக்க வேண்டும்’’ என்று பேசினார்.

மேலும், தனது இந்த கருத்துக்கு மக்களிடம் எந்த அளவுக்கு எழுச்சி ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்தே அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

முக்கிய முடிவுகள்

ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் ரஜினியை நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. பலதரப்பு கருத்துகள், விமர்சனங்களையும் உற்று கவனித்த அவர் நேற்று சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

சிறிய நகரில் பொதுக்கூட்டம்

‘கட்சி வேறு, ஆட்சி வேறு. முதல்வர் நாற்காலியில் அமர தனக்குவிருப்பம் இல்லை’ என்று ரஜினிகூறிய கருத்துகள் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருப்பதாக ரஜினி கருதுகிறார். அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுவதிலும் இந்த தாக்கம் இன்னும் அதிகரித்து, அவர் விரும்பிய எழுச்சி உருவாகும் எனவும் அவரிடம் புள்ளிவிவரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், உற்சாகம் அடைந்திருக்கும் ரஜினி, நேரடியாக களமிறங்கி மக்களை சந்திக்கும் எண்ணத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள சிறிய நகரம்ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக தனது நெருங்கிய வட்டாரத்திடம் கலந்துபேசியுள்ளார். தற்போது கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக இல்லாமல் எளிமையாக, சிறிய அளவில் நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு அறிக்கை

கட்சி தொடங்கினால் ரஜினியை மட்டுமே தலைவராக ஏற்றுக்கொள்வோம் என்பது ரசிகர்களின் மனநிலையாக உள்ளது.

அதேநேரம், அந்த பொறுப்பை ஏற்பது, தான் விரும்பும் மாற்று அரசியலுக்கு வித்திடாது என்பதால், ரஜினியும் தன் முடிவில் தெளிவாக, உறுதியாக இருக்கிறார். இதனால், மக்களிடம் எழுச்சி ஏற்படுவதோடு, ரசிகர்களின் மனநிலையும்மாற வேண்டும் என விரும்புகிறார்.

இந்தச் சூழலில், ‘தலைமைப் பொறுப்பு ஏற்பது ரஜினியின் விருப்பத்தைப் பொருத்தது. முதலில், கட்சி தொடங்கினால் போதும்’ என்ற மனநிலைக்கு ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் ஓரளவு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி ஒரு சுற்றறிக்கை வழியே சில ஆலோசனைகள், அறிவிப்புகளை அடுத்தடுத்த நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவது, முதல் பொதுக் கூட்டத்தை எந்த சிறு நகரத்தில் நடத்துவது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை ரஜினி அடுத்த ஒரு வாரத்துக்குள் அறிவிப்பார் என கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT