மருத்துவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்.எம்.சி) ஓய்வு பெற்ற மயக்கவியல் நிபுணர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மயக்க மருந்து கொடுப்பதால் சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் விளைவுகள் குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி சார்பாக சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதுகலை பட்டப் படிப்பு மாணவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
ஒருவர் மருத்துவராக ஒரு முறை பதிவு செய்துகொண்டால் அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அவர் மருத்துவராக பணியாற்ற முடியும். அவர் பழைய மருந்துகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டே மருத்துவத் துறையில் இருக்க முடியும். மருத்துவர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை. ஒரு சில வெளிநாடுகளில் இருப்பது போல, மருத்துவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை இயக்குநர் மருத்துவர் பி.கலா பேசும்போது, “மயக்கவியல் துறையில் நாளுக்கு நாள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாணவர்கள் அவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் எஸ்.அனந்தப்பன், எம்.வெள்ளியங்கிரி, ஓய்வு பெற்ற பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். விழாவில் ஓய்வு பெற்ற மயக்கவியல் நிபுணர்கள் சந்திரசேகரன் மற்றும் எம்.எம்.கே.பாஷா கவுரவிக்கப்பட்டனர்.
மயக்கவியல் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நவீன இயந்திரங்களை விளக்கும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.