ரஜினி முதல்வராக விரும்பவில்லை என்பதை பாஜக பயன்படுத்திக்கொள்ளுமா? என்பது குறித்த கேள்விக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளித்தார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகச் செயல்பட்ட முருகன் பாஜகவின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவராக நியமிக்கப்பட்டவுடன் முதன்முதலாக சென்னை வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
செய்தியாளர்களுக்கு முருகன் அளித்த பேட்டி:
“பாஜக மாநிலத் தலைவராக என்னை நியமித்துள்ள ஜே.பி.நட்டா, அமித் ஷா, பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை நண்பர்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளோம்.
கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி அளவில் கவனம் செலுத்த உள்ளோம். அனைத்து பூத்துகளிலும் பிரதான கட்சியாக பாஜகவை கொண்டு செல்ல முயற்சி எடுப்போம்.
அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் படித்த இளைஞர்கள், மாணவர்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அரவணைத்துக் கொண்டுசெல்ல உள்ளோம். அனைத்து சகோதரர்கள் பொதுமக்கள் அனைவரிடமும் கட்சியைக் கொண்டு செல்ல உள்ளோம்”.
இவ்வாறு முருகன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
என்ன வகையான சவாலை எதிர்பார்க்கிறீர்கள்?
நாங்கள் எப்போதும் நேர்மறையான அரசியலைத்தான் எடுத்துச் செல்கிறோம். நாங்கள் சவாலாக எதையும் எடுப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் நேர்மறையான அரசியலைக் கொண்டு செல்ல இருக்கிறோம்.
தமிழகத்தில் பாஜக வாக்கு எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், மக்களிடம் கட்சியைக் கொண்டு செல்வதற்காக என்ன வழியை வைத்துள்ளீர்கள்?
ஏற்கெனவே கட்சியில் பலபேர் திட்டங்களை வகுத்துள்ளோம். கட்சியின் அமைப்புத் தேர்தல் தற்போது முடிந்துள்ளது. இதற்குப் பின்னர் மாவட்ட அளவில், மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் அளவில் கொண்டு செல்ல உள்ளோம்.
அதுவுமல்லாமல் மத்திய அரசின் திட்டப் பயன்களை அதிக அளவில் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் மத்தியில் இதை எடுத்துச் செல்வோம். மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் செல்வோம்.
இதற்கு முன்னர் இருந்த தலைவர் தாமரை மலர்ந்தே தீரும் என்று சொன்னார். அது நடக்கவில்லை. நீங்கள் தலைவராக வந்த நிலையில் அதற்கான வாய்ப்பு இருக்குமா?
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிக அளவில் வென்றுள்ளனர். அதிக அளவில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிக அளவில் இருப்பார்கள். வரும் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் அங்கு அமர்ந்திருப்பார்கள்.
சிஏஏ, என்பிஆருக்கு எதிரான போராட்டங்கள் பெரிய சவாலாக உள்ளன? நீங்கள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?
சிஏஏ ஏன் தேவை என்பதற்காக சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரணி நடத்தியுள்ளோம். வரும் 20-ம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் முழுவதும், உண்மையைச் சொல்வோம் ஊருக்குச் சொல்வோம், உரக்கச் சொல்வோம் என்கிற பிரச்சார இயக்கம் ஆரம்பிக்க உள்ளோம். ஏற்கெனவே மாநிலத் தலைவர் இல்லாமலே இயக்கங்கள் நடத்திதான் வருகிறோம்.
2021-ல் உங்கள் கட்சியின் நோக்கம் என்னவாக இருக்கும்?
இளைஞர்களை நோக்கிதான் அனைத்தும் உள்ளன. நாங்களும் இளைஞர்களை நோக்கிச் செல்வோம். அதிக அளவில் கட்சியில் வாய்ப்பு கொடுக்கப்படும்.
ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்களா?
அரசியல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் வரலாம். எங்களுடைய அரசியல் இலக்கை நோக்கிதான் நாங்கள் செல்வோம். நமது நாடு ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவரவர்களுக்கு கொள்கை இருக்கும். எங்கள் கொள்கை மக்களை நோக்கிப் போக வேண்டும் என்பதே.
2019 கூட்டணி இப்போதும் தொடர்கிறதா?
இப்போதைக்கு நாங்கள் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்கள் அகில இந்தியத் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம்.
தமிழகம் சார்ந்து இயங்குவீர்களா? தேசியப் பார்வையில் இயங்குவீர்களா?
தமிழகப் பார்வை தமிழ் மக்கள், தமிழக நலன் மீது நிச்சயம் காம்பரமைஸ் செய்ய மாட்டோம். தமிழ் மக்கள் நலனை ஒட்டித்தான் செல்வோம்.
சிறுபான்மை மக்களை அரவணைத்துச் செல்வீர்களா?
நாங்கள் எப்போதும் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துதான் செல்கிறோம். சாதி, மதம் எதையும் பார்ப்பதில்லை.
இவ்வாறு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.