தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மதுவுக்கு எதிராகவும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்ததுடன் அருகே உள்ள டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் நேற்று காலை 10.30 மணி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அந்த மாணவர்கள் தங்கள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நிருபர்களிடம் தெரிவித்தனர். மேலும் மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் அவர்கள் தொடங்கினர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.