தமிழகம்

சேலத்தில் உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாள் மகன், மகள் உட்பட 50 பேர் கைது

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சேலத்தில் உண்ணாவிரதம் இருந்த காந்தியவாதி சசிபெருமாளின் மனைவி, இரு மகன்கள், மகள் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அடுத்த உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது, காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு பின்னர் சசிபெருமாளின் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைக்க போலீஸார் முயன்றபோது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என சசிபெருமாளின் குடும்பத்தினர் உறுதியாக கூறிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு சசிபெருமாளின் மகன் விவேக், மகள் கவியரசி உள்ளிட்ட 28 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் விவேக், கவியரசி மற்றும் இவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத்தில் கலந்துகொண்ட மதிமுக மாநகர செயலாளர் ஆனந்தராஜ், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத் தலைவர் பூமொழி உட்பட 28 பேரை கைது செய்தனர்.

இவர்கள் கைதைனதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்க காந்தி சிலைக்கு வருவதாக போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து, கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கைது நடவடிக்கை குறித்து போலீஸார் கூறும்போது, “உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைது செய்திருப்பதாக” தெரிவித்தனர்.

தகவல் அறிந்த மதிமுக மாவட்ட செயலாளர் தாமரைகண்ணன், சம்பவ இடத்துக்கு வந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எப்படி கைது செய்யலாம்? எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததோடு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த இடத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பகல் 12 மணியளவில் சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன் நவநீதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருந்ததாக கூறி போலீஸார் மகிழம், நவநீதன் மற்றும் சேலம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மோகன்குமாரமங்கலம், மதிமுக மாவட்ட செயலாளர் தாமரைகண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணி துணைச் செய லாளர் இமயவர்மன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT