தமிழகம்

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த கொள்ளை விவகாரம்; ஆந்திரா, ராஜஸ்தானை சேர்ந்த மேலும் 3 பேர் பிடிபட்டனர்: 86 பவுன் தங்க நகைகள், ரூ.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த மேலும் 3 பேரை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுவரை 86 பவுன் தங்க நகைகள், ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியில், கடந்த 22-ம் தேதி இரவு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக, காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மேற்கு மண்டல சரக ஐஜி பெரியய்யா உத்தரவின்பேரில், டிஐஜி கார்த்திகேயன், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் மேற்பார்வையில், துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜே.அனில்குமார் பன்வார் (38) என்பவரை ஹரியானா போலீஸார் கைது செய்திருந்தனர். பல்லடம் வங்கி கொள்ளை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் திருப்பூர் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்து, 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நேற்றுடன் போலீஸ்காவல் நிறைவுபெற்ற நிலையில், பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பிறகு, டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

அனில்குமார் பன்வாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், குறிப்பிட்ட அளவு ஆந்திர மாநிலம் அனந்த பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ண ஆச்சாரி, ராமன்ஜீ அப்பா ஆகியோரிடம் விற்பனைக்காக அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அனந்தபூர் விரைந்த தனிப்படை போலீஸார், இருவரையும் கைது செய்து தங்க நகைகளை கைப்பற்றினர். நேற்று முன்தினம் இரவு, அவர்கள் திருப்பூர் அழைத்து வரப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த இசார்கான்என்பவருக்கு தொடர்பு இருப்பது,ஏற்கெனவே அனில்குமார் பன்வாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது. இதையடுத்து, மற்றொரு தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்று,இசார்கானை கைது செய்தனர். அவரிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT