தமிழகத்தில் கோவிட்-19 குறித்த வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படவும் தேவையில்லை என்று முதல்வர் பழனிசாமி, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர். சட்டப்பேரவையில் கோவிட்-19 பாதிப்பு குறித்து நேற்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதம்:
வி.பி.பரமசிவம் (அதிமுக): கோவிட்-19 பாதிப்பு தொடர்பாக பல்வேறு தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. விலங்குகள் மூலம் கோழியில் இருந்து கோவிட்-19 வருகிறது என்றுபரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
சரவணன் (திமுக): ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘பெருநோய் தாக்கும் நேரத்தில் தனிநபர், அரசு, சமூகம்என 3 தளங்களில் பணியாற்றினால்தான் கட்டுப்படுத்த முடியும்’ என்ற செய்தி வந்துள்ளது. தடுப்பு மருந்து இல்லாவிட்டாலும் கோவிட்-19 பதிப்பால் இறப்பு விகிதம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. முகக்கவசம் விலையைக் கட்டுப்படுத்தி, குறைந்த விலையில் வழங்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகளை நகரின் நடுவில் வைக்காமல் புறநகர் பகுதியில் அமைக்கலாம்.
இதேபோல், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஐயுஎம்எல் உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆகியோரும் கோவிட்-19 குறித்து பேசினர்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: கோவிட்-19 நோய்க்கிருமியின் வேகத்தைவிட வதந்தியின் வேகம் அதிகமாக உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் ஜனவரி 18-ம் தேதியே தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை மருத்துவமனைகளில் உருவாக்கியுள்ளோம். கோவிட்-19 தமிழகத்தில் பரவவில்லை. சென்னை விமான நிலையத்தில் இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பேரை ஆய்வு செய்துள்ளோம். 1,465 பேர் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
தற்போது கேரளாவில் 17, கர்நாடகாவில் 4 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் வந்துள்ளதால் கூடுதல் அச்சம் வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது.
50 சதவீதம் கிரசால், 50 சதவீதம் திரவ சோப் சேர்ந்த லைசாலை தெளித்தால் 100 சதவீதம் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு தமிழகம் சார்பில் தெரிவித்தோம். தற்போது, இதுபோன்ற மருந்தை தெளிக்க தொடங்கியதால் சீனாவில் இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் தாம்பரம் சானடோரியம், மதுரையில் தோப்பூர், ஈரோட்டில் பெருந்துறை, தஞ்சை - திருச்சி இடையே செங்கிப்பட்டி ஆகிய 4 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அமைப்புகளை உருவாக்க முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். அதனால், கோவிட்-19 தாக்குதலை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சுய சுத்தம் மிகவும் முக்கியம்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: இந்த விவகாரத்தில் 3 மருத்துவர்களை பேச விட்டது தவறு. வதந்தியை அரசுதான் பரப்புகிறது. முகக்கவசத்தை முதலில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொடுங்கள். அனைத்து நாடுகளிலும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். பல நாடுகளில் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் ஒன்றுமில்லை என்கிறீர்கள். நாளை உறுப்பினர்களுக்கு முகக் கவசம் தரவேண்டும்.
முதல்வர் பழனிசாமி: நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினால், தும்மினால் இந்நோய் பரவும் என்றுதான் சொல்லியுள்ளார்கள். இங்கு யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை. 70 வயதுக்கு மேல் பாதிப்புஎன்பதால் நீங்கள் அச்சப்படுகிறீர்களோ என்னவோ, தெரியவில்லை. அந்தக் கவலை வேண்டாம். சிறந்த மருத்துவர்கள் இருக்கின்றனர். உங்களுக்கு வயது அதிகமாக இருந்தாலும்கூட தகுந்த சிகிச்சை அளிக்கமருத்துவர்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.