தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

திமுக சார்பில் திருச்சி சிவா,அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் மக்களவை முன்னாள் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும் மீதமுள்ள ஓரிடத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் பேரவைச் செயலர் கே.சீனிவாசனிடம் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், தமாகா மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்டோர் உடனிருந்னர்.

போட்டியின்றி தேர்வு

அதிமுக, திமுக வேட்பாளர்கள் தவிர சுயேச்சைகளாக 2 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை வேட்புமனுவை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். சுயேச்சைகளின் வேட்புமனுக்களை எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியாததால் அவர்களின் மனுக்கள் 16-ம் தேதி நடக்கும் பரிசீலனையின்போது தள்ளுபடிசெய்யப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்து அதிமுக, திமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். மனுக்களை திரும்பப் பெற 18-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT