2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் நிகழும் என்பது உறுதி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் நேற்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது, தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார். மேலும், மக்களிடம் புரட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரஜினியின் பேச்சு தொடர்பாக, சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "ரஜினி மிகவும் நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கும் கட்சிக்கும் அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர் தன் நிலைப்பாட்டை பலமுறை தெளிவாக சொல்லிவிட்டார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாததால் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது, இதுதான் சரியான நேரம் என்கிறார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் நல்ல முடிவு வரும். தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் நிகழும் என்பது உறுதி" என தெரிவித்தார்.