தமிழகம்

ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி வழக்கு: கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் அலெக்ஸ் பென்சிகர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கோவிட்-19 வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 29 முதல் வரும் மே 24வரை நடைபெறவுள்ளது. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் இப்போட்டிகளைப் பார்வையிடுவர்.

இதனால் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவவாய்ப்புள்ளது. எனவே ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில், ‘‘கோவிட்-19 வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளிவைப்பதா அல்லது பார்வையாளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்து மைதானத்துக்குள் அனுப்புவதா என்பது குறித்து விரைவில்பதில்மனு தாக்கல் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், போட்டிகளைக் காணவரும் பார்வையாளர்களுக்கு கோவிட்-19 வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT