கட்சி தொடக்கம், மாநாடு என்றுஅடுத்தகட்ட அரசியல் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களிடம், அவரது அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கடந்த வாரம்கூட்டிய ரஜினி, தனது அரசியல் நிலைபாடு குறித்து தெரிவித்தார். இதில், ‘‘கட்சி வேறு; ஆட்சி வேறு.கட்சி தொடங்கினால் இளைஞர்கள், புதியவர்கள், திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்பு. முதல்வராகப் பொறுப்பேற்க தனக்கு விருப்பம் இல்லை’’ என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் அதிர்ச்சியடைந்த மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை அவரிடமே வெளியிட்டனர்.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு மற்றும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு நேற்று ஒரே நாளில் ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி.
சென்னையில் உள்ள ஓட்டலில் நேற்று காலை 10.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்.
அதே நேரத்தில், ரஜினியின் போயஸ் தோட்டம் இல்லத்தில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரண்டிருந்தனர். ரஜினியின் அரை மணி நேர உரையை அவர்கள் நேரலையில் காணும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்ற நிர்வாகிகள்32 பேர் இதில் கலந்துகொண்டனர்.
கண்ணியமானவருக்கு வாய்ப்பு
செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்த ரஜினி, அங்கு மாவட்டச் செயலாளர்களை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார்.அதில் அவர் பேசியது குறித்து தென் தமிழகத்தை சேர்ந்த சிலமாவட்டச் செலயாளர்கள் கூறியதாவது:
ரஜினி வந்ததும், ‘‘செய்தியாளர் சந்திப்பில் நான் பேசியதை எல்லோரும் கேட்டீர்களா?’’ என்று முதலில்விசாரித்தார். ‘‘உங்கள் ஆர்வத்தையும், உத்வேகத்தையும் மட்டுமே நம்பி கட்சி தொடங்கிவிட முடியாது.தேவையற்ற கட்சிப் பதவிகளைநீக்குவது, கண்ணியமானவர் களுக்கு வாய்ப்பு, கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறு வேறு தலைமை என்று நான் சொன்ன 3 விஷயங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.
அடுத்தகட்டம்?
மக்கள் மனதில் மாற்றம் வந்தால்தான் மாற்று அரசியல் என்றநிலைப்பாடு வலுவானதாக இருக்கும். எனவே, மக்கள் தற்போது என்ன மாதிரி நினைக்கின்றனர் என்பதை கவனிப்போம். வெளியில் இருந்து கருத்துகள் வர வேண்டும். அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். அதன்பிறகு, அரசியலில் அடுத்தகட்டத்துக்கு போகலாம்’’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இவ்வாறு தென் தமிழகத்தை சேர்ந்த சில மாவட்டச் செலயாளர்கள் தெரிவித்தனர்.
ரஜினியின் இந்த கருத்து குறித்து மேலும் சில மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டபோது, ‘‘கட்சி அறிவிப்பு, மாநாடுஎன்று அடுத்தகட்ட அரசியல் பணிகள் குறித்து ரஜினி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் வந்தோம். ஆனால், மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் அரசி யலில் இறங்க ரஜினி தயக்கம் காட்டுகிறார். தற்போதைய அவரது நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது’’ என்றனர்.
கோவிட்-19 சோதனை
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் நுழைவுவாயிலிலேயே ‘கோவிட்-19’ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த ரஜினிக்கு மன்றத்தின் பெண் தொண்டர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.