தமிழகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்யக் கோரி பாம்பனில் வியாழக்கிழமை ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

தீவு 7 தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் முருகானந்தம், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட பொருப்பாளர் வடகொரியா, மதிமுக மாநில மீனவரணி துணை செயலாளர் சின்னத்தம்பி, மனித நேய மக்கள் கட்சி நகர் செயலாளர் செய்யது இபுராம்சா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ஆர். செந்தில் வேல் ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கும் தொடர்பு இல்லை. இவர்கள் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களை 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியும் தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவது கண்டனத்திற்குரியது.

ஆளுநர் உடனே தனது உரிமையைப் பயன்படுத்தி உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும், என்றார்.

-எஸ்.முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT