உசிலம்பட்டி அருகே மீன்பிடி திருவிழா நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரைச் சேர்ந்த தனிக்கொடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்புக் கோயிலில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதையடுத்து அருகே உள்ள செல்லப்பன் கோட்டை கண்மாயில் மீன் பிடித் திருவிழா நடத்தப்படும்.
இந்தாண்டு மீன்பிடி திருவிழாவுக்கு அனுமதி கேட்டு பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டோம். பொதுப்பணித்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனவே மீன்பிடி திருவிழாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன் பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர், இந்தக் கண்மாய் குடிநீர் ஆதாரத்திற்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மீன்பிடி திருவிழாவுக்கு அனுமதி வழங்க முடியாது” என்றார்.
இதையேற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.