கட்சித் தொண்டர்களை அவமானப்படுத்தும்விதமாக ரஜினி பேசியுள்ளார் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் அக்கட்சியின் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் இன்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது, தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார். மேலும், மக்களிடம் புரட்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரஜினியின் பேச்சு தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் அளித்த பேட்டி:
"ரஜினியின் திட்டங்கள் அவர் தன் தொண்டர்கள் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள் என்று சொல்கிறார்.
தொண்டர்கள்தான் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்ற புதிய கருத்தை உருவாக்கியுள்ளார். கொள்கைகளை மட்டுமே நம்பி, உடைமைகளை இன்னும் சொல்லப்போனால் தங்கள் உயிரைக் கூட இழப்பதற்குத் தயாராக இருக்கும் தொண்டர்களை அவமானப்படுத்தும் கருத்து இது. அவருடைய கருத்து அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானது. மக்கள் குறித்து என்ன நினைக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.
2017-ல் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பிறகு அவருடைய 3 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்தப் படங்கள் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவின. விநியோகஸ்தர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்கும் நிலை உள்ளது.
மக்களே நேரடியாக போயஸ் கார்டனுக்குச் சென்று நீங்கள்தான் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும் என ரஜினி நினைக்கிறார். இது சரியல்ல. மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பதுபோல தமிழக அரசியல் இருப்பதாகக் கூறுகிறார். எதற்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவ வேண்டும். அவர் ஒரு புதுப் பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே!
பாசிச மனநிலையில் ரஜினி பேசுகிறார். அவர் அடிப்படையில் நல்ல மனிதர். ஆனால், அவரின் கருத்துகள் ஆபத்தானவை. மக்களுக்கு எதிரான கருத்துகளை வைத்துள்ளார். அரசியல் கட்சி குறித்த புரிதல் அவருக்கு இல்லை".
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.