தமிழகம்

1996-ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தினரை மட்டும்தான் சந்திக்கிறார்; மக்களை சந்திக்கவே இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

எஸ்.கோமதி விநாயகம்

1996-ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தினரைத்தான் சந்திக்கிறார்; இன்னும் அவர் மக்களை சந்திக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்லாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் விலக்கில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை பணிக்காக இடிக்கப்பட்டது. இதனால் நாலாட்டின்புதூர் காவல் நிலையம், வானரமுட்டி புறக்காவல் நிலைய கட்டடத்தில் இயங்கி வந்தது.

இந்நிலையில் நாலாட்டின்புதூர் காவல் நிலையம் கட்ட ரூ.1.05 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த கட்டட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி திருச்செந்தூரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொளி மூலம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

புதிய காவல் நிலைய கட்டிடத்தில் இன்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். அப்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், காவல் ஆய்வாளர் சுகா தேவி மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் இருந்து அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகிறார். இன்னும் அவர் மக்களை சந்திக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இந்த நடைமுறையே அவர் கடைப்பிடித்து வருகிறார்.

மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. முதல்வரும், துணை முதல்வரும் கலந்து பேசி சென்றமுறை கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவுக்கு வழங்கினர். இந்த முறை மற்றொரு கூட்டணி கட்சியான வாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து ஒரு சந்தர்ப்பம் வந்தால் வேறு ஒருவருக்கு சீட் கொடுப்பது குறித்து முடிவு செய்வார்கள். அதிமுக இதுவரை நெருக்கடிக்கு ஆளானது கிடையாது. நெருக்கடிக்கு ஆளாகப் போவதுமில்லை.

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், காவலர் குடியிருப்புகள் கட்டும் பணிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

காவல் துறை மானியக் கோரிக்கையை மார்ச் 27-ம் தேதி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது காவலர் குடியிருப்பு தொடர்பான கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக, தமிழக முதல்வர் டெல்லி சிறப்பு பிரதிநிதி கனவாய் சுந்தரத்திடம் கடிதம் கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து முதல்வரின் கடிதத்தை அளிக்க உள்ளார். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒருவருக்கு கூட கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT