செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி | படம்: ம.பிரபு 
தமிழகம்

கட்சித் தலைமை வேறு; ஆட்சித் தலைமை வேறு: 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வாய்ப்பு - ரஜினி பேச்சு

செய்திப்பிரிவு

தன் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு நான் சில திட்டங்களை வைத்திருக்கிறேன். அதில் 3 முக்கிய திட்டங்கள் உள்ளன.

முதலாவதாக, தமிழகத்தில் திமுக, அதிமுக என 2 பெரிய கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கட்சிப் பதவிகள் உள்ளன. அது தேர்தல் நேரத்தில் தேவை. ஆனால், தேர்தல் முடிந்தபிறகு அது தேவையில்லை. அத்தனை பதவிகள் தேவையில்லை. ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பதவிகளில் இருப்பவர்கள் டெண்டர் உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபடுவர். அது ஆட்சிக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் தீயதாக முடியும். சிலர் அந்த கட்சிப் பதவிகளை தொழிலாகவே வைத்துள்ளனர். வேறு தொழிலே இல்லை. அதுதான் தொழில்.

நாம் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் நேரத்தில் எவ்வளவு பதவிகள் தேவையோ, அவ்வளவு பதவிகளை வைத்துக்கொள்ளலாம். பின்னர் அந்தப் பதவிகள் பறிக்கப்படும். தேர்தல் முடிந்தவுடன் கட்சி நடத்துவதற்கு அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். கல்யாணம் என்றால் சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் தேவை. கல்யாணம் முடிந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டிருப்போமா? அதற்காக கட்சியில் இருப்பவர்களை வேலைக்காரர்கள் என சொல்வதாக நினைக்காதீர்கள்.

இரண்டாவதாக, சட்டப்பேரவையில் இருப்பவர்கள் எல்லோரும் 60-65 வயதில் இருக்கின்றனர். 40 வயதில் யாரும் இல்லை. அதுவும் இருப்பவர்களே இருக்கின்றனர். புதியவர்கள் அரசியலுக்கு வருவதில்லை. அவர்கள் அரசியலை சாக்கடை எனக் கருதி ஒதுங்கியிருக்கின்றனர். இளைஞர்களுக்கு அரசியலில் பதவிகள் கிடைப்பதில்லை. அதனால், நம் கட்சியில் 60-65% வேட்பாளர்களாக 50 வயதுக்குக் கீழ் உள்ள கம்பீரமான கண்ணியமனாவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் 30% இடங்கள் மற்ற கட்சியில் இருந்து விரும்பி நம் கட்சிகளில் சேர்பவர்களுக்குக் கொடுக்கப்படும். வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பதவிகளில் வகிக்கும் நல்லவர்களின் வீடுகளுக்கு நானே சென்று அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு தரப்படும். இதனால் சட்டப்பேரவைக்கு புது மின்சாரம் பாயும். அதற்கு ரஜினி பாலமாக இருக்க வேண்டும். சினிமாவில் கிடைத்த புகழ், அன்பு இதற்கு உதவும் என நம்புகிறேன்.

மூன்றாவதாக, தேசியக் கட்சிகளைத் தவிர மாநிலக் கட்சிகளில் ஒருவரேதான் ஆட்சி தலைவராகவும் கட்சி தலைவராகவும் இருப்பார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் அவர்களிடம் ஒன்றும் கேட்க முடியாது, கட்சியில் இருப்பவர்கள் கேட்டாலும் கட்சியில் இருந்து தூக்கிவிடுவர். அதனால், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை தான் நம் கட்சியில் இருக்கும்."

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

SCROLL FOR NEXT