சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ள நிலையில் மானாமதுரை தொகுதியில் மட்டும் ஒரே ஒரு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த எம்எல்ஏ பரிந்துரை செய்துள்ளார். மற்ற இடங்களில் அமைச்சர், எம்எல்ஏக்கள் அக்கறை காட்டாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பள்ளிக் கல்வித் துறையில் ஆண்டுதோறும் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதில் நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் பங்களிப்பாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்.
அதேபோல் உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மக்கள் பங்களிப்பாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் பரிந்துரையும் அவசியம். பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் பரிந்துரை செய்தாலும், எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
இந்த ஆண்டு 150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் பள்ளிகளை தரம் உயர்த்த எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
மற்ற மாவட்டங்களில்..
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பள்ளி கள் தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் மட்டுமே 50 பள்ளி களுக்குப் பரிந்துரை செய் துள்ளார்.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் ஏராளமான பள்ளி களை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் ஒரு பள்ளி யை கூட பரிந்துரை செய்யவில்லை.
இந்த மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய தொகுதிகளில், மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் பரிந்துரை செய்த தனது தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஒன்றியம் வயல்சேரி பள்ளி மட்டுமே தரம் உயர்த்தப்பட உள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது தொடர்பாக கல்வித் துறை வெளியிட்டுள்ள பட்டியலின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.
பள்ளிகளை தரம் உயர்த்த முயற்சி எடுக்காத அமைச்சர், எம்எல்ஏக்கள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் குறைவான உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளே உள்ளன. இதனால் மாணவர்கள் நீண்டதூரம் சென்று படிக்க வேண்டி யுள்ளது. மேலும் எம்எல்ஏக்கள் பரிந்துரை இருந்தால் மட்டுமே பள்ளிகளை தரம் உயர்த்து கின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரே ஒரு பள்ளிக்கு மட்டும் பரிந்துரை செய்தது வேதனையாக உள்ளது என்று கூறினர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பரிந்துரை வந்தாலும் அரசுக்கு கருத்துரு அனுப்புகிறோம்" என்று கூறினர்.