செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் | படம்: ம.பிரபு 
தமிழகம்

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த 3 முக்கிய திட்டங்களை வைத்துள்ளேன்: ரஜினிகாந்த் பேச்சு

செய்திப்பிரிவு

அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு என்னிடம் 3 முக்கியத் திட்டங்கள் உள்ளன என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"மாவட்ட நிர்வாகிகளை ஏற்கெனவே சந்தித்த பிறகு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை. தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் எனத் தெரிவித்திருந்தேன். அது ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், மாவட்டச் செயலாளர்களின் வழியாக அந்தத் தகவல்கள் வெளியே வரவில்லை. அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் என் அரசியல் குறித்த கண்ணோட்டத்தையும் சொல்ல இருக்கிறேன். இதைச் சொன்னால் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். எனக்கும் எப்படியான அதிர்வு இருக்கிறது என்பது குறித்த தெளிவு கிடைக்கும்.

1995-ல் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார் எனக் கூறுகின்றனர். முதன்முறையாக அரசியலுக்கு வருவதாக நான் 2017, டிச.31 அன்றுதான் சொன்னேன். அதற்கு முன்பு சொன்னது கிடையாது. முன்பு இதுகுறித்து கேட்டால் 'ஆண்டவன் கையில் இருக்கிறது' என்றுதான் சொல்வேன். அரசியலுக்கு வருவதாக நான் சொல்லிக்கொண்டே இருப்பதாக இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.

1996-ல் தமிழக அரசியலில் என் பங்கு இருந்தது. நான் அரசியலுக்கு வருவது தலையெழுத்தாக இருந்தால், என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என, அந்தக் காலகட்டத்தில் இருந்து அரசியலைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஆட்சி எப்போது விழுகும் என்ற நிலை இருந்தது. அப்போதுதான் 2017-ல் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். 'சிஸ்டம் சரியில்லை, அதை சரிசெய்ய வேண்டும், மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்' என சொன்னேன்.

இதனை சரி செய்யாமல், அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வராமல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் மீன் குழம்பு செய்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரை பொங்கல் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். அதனால், அரசியல் மாற்றத்துக்கு நான் சில திட்டங்களை வைத்திருந்தேன். அதில் 3 முக்கிய திட்டங்கள் உள்ளன."

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT