மதுரை மாநகராட்சி ரூ.35 கோடி நிதி ஒதுக்கியும் புதிய சாலைகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்துக்கு முன் இந்தச் சாலைகளை அமை த்தால் மட்டுமே அவை தரமாக அமையும் வாய்ப்புள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் வாகனப் பெருக்கமும், மக்கள் நெருக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால், சாலை வசதி மிக மோசமாக உள்ளது. மதுரை ஒரு சுற்றுலா மற்றும் ஆன்மிக நகராக மட்டுமல்லாது மருத்துவம், தொழில்துறையில் இயல்பாகவே வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
ஆனால், நகரின் சாலை கட்டமைப்பு வசதி இன்மை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. சுற்றுலா வரும் உள்நாட்டு, வெளிநாட்டினர் நகரச் சாலைகளில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி விசா லமாக புதிய சாலைகள் போட கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்காலிக நிவாரணமாக ஒட்டுப்போடும் வேலை (‘பேட்ஜ் ஒர்க்’) மட்டும் செய்து வந்ததால் அவை சாரல் மழைக்கே மீண்டும் காணாமல் போயின.
இந்நிலையில் மதுரை மாநக ராட்சியில் மோசமான சாலைகளைப் பட்டியல் எடுத்து, அதில் முதற் கட்டமாக 200 சாலைகளைப் புதிதாக போடுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக 65 கி.மீ., தொலைவுக்கு இந்தப் புதிய சாலைகள் போடுவதற்கு மாநகராட்சி ரூ.35 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், இந்த புதிய சாலைப் பணிகள் இதுவரை தொடங்கவில்லை.
தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், இதுவே புதிய சாலைகள் போடு வதற்கு சரியான காலமாகும். சாலைகள் அமைக்க தாமதமாகி மழைக்காலத்தில் போட்டால் புதிய சாலைகள் போட்ட வேகத்தில் தண்ணீரில் அரித்து செல்ல வாய்ப்புள்ளது.
அதனால், இந்த புதிய 200 சாலைகள் அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகா ரிகள் கூறுகையில், ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு இதுவரை 30 சாலைகள் அமைக்க ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் பணி ஆணை வழங்கவும், சில சாலைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி மீண்டும் விடு வதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிவிடும், என்றனர்.